Monday, July 31, 2017

தனிமை ஓவியா

தனிமை என்ற இன்பத்தை நீ இன்பமாக 
விரும்பினால் அது ஒரு போதை 

மற்றவர்கள் உன்னை அந்த நிலைக்கு தள்ளினால் 
அது உன் வாழ்க்கை வெற்றிக்கான பாதை 

எல்லாருக்கும் நீ செய்வது தவறாகவே தெரியலாம் 
உன் மனதை கேள் அது உண்மை சொல்லும் 

கூடவே  இருந்து நம் உழைப்பை உறிஞ்சு எடுக்கும் 
ஒட்டுண்ணி தாவரமாக இல்லாமல்  தனி ஒரு 
மரமாக நிலைத்து நின்றாய் 

பிறர் போல் நீயும் வாயில்  வந்தவற்றை பேசாமல் 
நல்லதையே பேசும் பொறுமை கொண்டாய் 

பிறர் படும் துன்பத்தை நீ கண்டு துடித்தாய் 
நீ படும் துன்பத்திற்கு யார் ஆறுதல் கூற 
என்று தவித்தாய் 

எது சரி தவறு என்பதை பட்டென சொன்னாய் 
அம்பு போல் உன் உள்ளம் தைத்தவர்களை 
உன் அன்பினாலே வென்றாய் 

எவ்வளவு தான் கஷ்டம் வந்தும் உன் புன்னகையை 
கொண்டு வென்றாய் 

உனக்குள்ளும் உணர்வு உள்ளது என்பதை 
கண்ணீரிலே சொன்னாய் 

குழந்தை போல் நீ எல்லார் மனங்களையும் வென்றாய் 
பல பொன்மொழிகள் எனக்குள் உண்டு நான் 
குழந்தை இல்லை என்றாய் 

அழகு என்றால் புற அழகை என்று சொல்லும் சில பேர் 
இன்று உந்தன் மனஅழகை கண்டு வியந்து நின்றார் 


ஓவியா என்று நீயும் உன் பெயரை சொன்னாய் 
நம் வாழ்க்கை நாம் வரையும் ஓவியம் என்று எங்களுக்கு 
சொன்னாய்.....! 


 பாகா 

Monday, July 24, 2017

கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள்

கஷ்டப்படுத்து கஷ்டப்படுத்து
உன்னை நீயே கஷ்டப்படுத்து 

பிறர் வந்து துன்புறுத்தும் முன்னே 
உன்னை நீயே கஷ்டப்படுத்து 

நன்மை உந்தன் வாழ்வில் எந்நாளும் 
கிடைக்க தினமும் உன்னை 
கஷ்டப்படுத்து 

கஷ்டத்தை நீயும் இஷ்டமாக்கி கொண்டால் 
எதிர்காலம் உனக்கு பொற்காலமாகும் 

உன் தலைமுறை என்றும் நன்றாக வாழ 
அனுதினமும் உன்னை கஷ்டப்படுத்து 

இளமை பருவத்தை வீணாக்காமல் 
முழுவதுமாக உன்னை கஷ்டப்படுத்து 

வரும்காலத்தை உந்தன் வசமாக்கி கொள்ள 
உன்னை மிகவும் கஷ்டப்படுத்து 

முதுமை காலத்தில் உன்னை யாரும் 
கஷ்டப்படுத்தாமல் இருக்க இப்பொழுதே 
உன்னை கஷ்டப்படுத்து 


பாகா 



Monday, July 17, 2017

அமைதி போராட்டம்

இயற்கை என்பது பொதுவானது 
இயற்கைக்கு சொந்தம் கொண்டாட ஒருவரால் முடியாது 

அனைவர்க்கும் சமமானதே இயற்கை 
நம் வளங்களை நாமே காக்க வேண்டும் 

காக்க வேண்டியவர்கள் தவறினால் 
நாம் நியாபகப்படுத்துவதில் 
தவறில்லை 

கிடைக்க வேண்டிய அடிப்படை தேவைகளை
கேட்டு பெற்றால் நலம் 

போராடி பெற்றால் பொதுநலம் 
எடுத்துக்காட்டான அமைதி போராட்டத்தை
முன்வையுங்கள் 

உங்களை ஒடுக்க வருபவர்களை 
அமைதியோடு புரிய வையுங்கள்

அவர்கள் அறியாமையில் துன்புறுத்தினால் 
அவர்களையும் சேர்த்து துன்புறுத்தாமல் 
அவர்களுக்காவும் போராடுகிறோம் என்பதை அவர்கள் 
மனதில் பதியுங்கள் 

தன்னை கொளுத்தினால் அவர்களையும் சேர்த்து 
 கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் 
சிகெரெட்டை போல் அல்லாமல் 

தன்னை  கொளுத்தினாலும் உங்களுக்கும் சேர்த்து  
ஒளியை தருகிறேன் என்று சொல்லும் மெழுகுவர்த்தியாய் 
இருங்கள் 

அமைதிப்போராட்டத்தின் வெற்றி சத்தம் 
ஒரு நாள் விண்ணை முட்டும்  


பாகா 


Monday, July 10, 2017

விவசாயியே கடவுள்

இவ்வுலகில் எனை படைத்ததற்கு 
கடவுளே என்னை மன்னித்து விடு 

இவ்வுலகில் அனைவரும் என்னை விரும்பும் 
வரம் கொடுத்ததற்கு கடவுளே என்னை 
மன்னித்து விடு 

ஜாதி மதம் என்று என்னை பாராமல் 
அனைவர்க்கும் கொடுத்ததற்கு கடவுளே 
என்னை மன்னித்து விடு 

உன்னை நீ பட்டினி போட்டு என்னை 
இவ்வுலகில் வளர்த்ததற்கு கடவுளே  
என்னை மன்னித்து விடு 

உன் கண்ணீரை நீராக்கி எனை 
ஊட்டி வளர்த்ததற்கு கடவுளே 
என்னை மன்னித்து விடு 

கடவுளுக்கு மரணம் கொடுத்த எங்களை 
மன்னித்து விடு கடவுளே மன்னித்து விடு 

பயிர்களாகிய எங்களை இவ்வுலகில் 
கொண்டு வந்த விவசாயிகளே நீங்கள் தான் 
எங்களுக்கு கடவுள் 

எவரும் உங்களை நினைக்கவில்லை 
என்று கவலை கொள்ளாதீர்கள் 
பயிர்களாகிய நாங்கள் இருக்கும் கடைசி 
மணித்துளி வரை உங்களை நினைத்திருப்போம் 
கண்ணீருடன்....?!

கடவுள் = விவசாயி 

பாகா 

Monday, July 3, 2017

காகிதம் மேல் பேனா காதல்

என் இதழால் உன் உடம்பை 
தொட்டு வருடிய அந்த அழுத்தங்கள் 

என் எச்சில் முத்தங்களால் உன் 
உடல் முழுவதும் உள்ள தழும்புகள் 

உன் தழும்புகள் பார்ப்பவர்கள் 
கண்களுக்கு விருந்து படைக்கும் 

நம் காதலை இந்த உலகம் 
காதலிக்கும் 

நம் காதல் பல காதலர்களை சேர்த்து 
வைக்கும் மொழி 

என் உயிர் பிரியும் நேரக் கடைசி நொடியில் 
உன் அழுகை மொழியில் 
உன் உடம்பில் ஏற்படுத்துவாய் காயம் 
நான் போனால் என்ன நீ வாழ்வாய் 
இவ்வுலகில்  பல்லாயிரம் ஆண்டுகள் அந்த 
சந்தோசத்தில் நான் போகிறேன் இவ்வுலகை விட்டு....!

பாகா