Monday, January 30, 2017

வெளித்தோற்றம் நிலையற்றது

நீ தான் துணையென்று 
நான் உனை நம்பி வந்தேன் 
நீயோ என் மனதை பார்க்காமல் 
தோற்றத்தைக் கண்டு தள்ளி வைத்தாய் 
என் மனதில் கொள்ளி  வைத்தாய் 

வாழ்வதற்கு தேவை மனம் 
அழகு தோற்றம் அல்ல 
நீயோ அன்று என்னை விலக்கி வைத்தாய் 
என் தோற்றம் கண்டு 
இன்றோ உன் தோற்றம் 
அழகு போய்விட்டது நெருப்பில் வெந்து 
இன்றும் நான் உன்னை 
விரும்புகிறேன் உன் மனதை 

தோற்றம் அழகு நிரந்தரமல்ல 
அன்று உன்னிடம் இருந்த தோற்றம் 
இன்று இல்லை 
புரிந்து கொள்  மனமே சிறந்தது 
வெளியிலிருப்பவை நிலையற்றவை.....!

பாகா  

Friday, January 27, 2017

ஏன் என்னுள் இந்த மாற்றம்

தினம் தினம் வாழ்க்கையே கண்ணீரிலா 
தினம் தினம் அழுவதற்கே 
இந்த பிறவியா 

சந்தோச வாழ்க்கையே ஒரு கனவு தானா 
அன்றாடம் கவலைகளே தாக்கும் 
மாயம் ஏனோ 

என்னைச் சுற்றிலும் மனித இனங்கள் 
என்னைத் தொட்டுப் பார்க்க மட்டும் 
துடிக்கும் மனித இனங்கள் 

யார் என்னைப் பார்த்தாலும் 
கூசுகிறது 
அவர்கள் என்னைத் தாழ்த்திப் பேசுவது 
போலத் தோன்றுவது ஏனோ 

விலங்கினமாய் நான் பிறந்திருந்தால் 
காடுகளில் கூட்டத்தோடு நானும் வாழ்ந்திருப்பேன் 
பறவையாய் நானும் பிறந்திருந்தால் 
சுதந்திரமாய் நானும் பறந்திருப்பேன் 

மனிதனாய் என்னை ஏன் பிறக்க வைத்தாய் 
சில வித்தியாசத்தை ஏன் என்னுள் 
புகுத்தி விட்டாய்.....?!

பாகா  

Tuesday, January 24, 2017

குடிகார கணவன்

நான் உன்னை நம்பி 
உன் கைகளை பற்றிக் கொண்டு 
பல கனவுகளோடு கல்யாண 
வாழ்க்கையில் நுழைந்தேன் 

நீயும் என் கைகளை பிடித்து 
இழுக்கின்றாய் என்னை கொஞ்சுவதற்கு 
அல்ல என்னை அடித்து 
துன்புறுத்துவதற்கு 

நீ அடித்தாலும் தாங்கிக் 
கொள்கிறேன் ஆனால் நீ 
கூறும் சந்தேக வார்த்தைகள் 
எனை தினமும் கொல்கின்றன 

நான் உன் மனைவி பொறுத்துக்
கொள்வேன் நம் குழந்தைகள் 
பிற குழந்தைகளைப் பார்த்து 
பல கனவுகளுடன் வாழ்கின்றன 

ஏமாற்றி விடாதே அந்தப் பிஞ்சுகளை 
நீ திருந்தி விடுவாய் என்று 
பல முறை ஏமாந்தாலும் 
இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் 
நம் வாழ்வு சிறக்கும் என்று....!

பாகா 

Wednesday, January 18, 2017

கருவுற்ற தாயின் சந்தோசம்

என் செல்லமே 
உனை கருவில் சுமந்த போதே 
பல கற்பனைகளை சுமக்கிறேன் 

என் செல்லத்துக்கு 
தங்கத் தட்டில் சோறூட்டுவேன் 
வெள்ளிக் கிண்ணத்தில் பாலூட்டுவேன் 

மலடி என்ற சொல்லில் சிக்காமல் 
எனக்குத் தாய் என்ற பட்டத்தை 
கொடுத்த உனக்கு உன் உயிராய் 
என்றும் நான் இருப்பேன் 

நீ கொடுக்கும் கஷ்டங்களை 
இஷ்டமாக ஏற்றுக் கொண்டு 
உன் இஷ்டப்படி வளர்ப்பேன் 

உனை இவ்வுலகம் வியந்து 
பார்க்கும்படி பெரிய இடத்துக்கு 
கொண்டு வருவேன் என் செல்லமே 

என் வியர்வைத் துளிகளை 
உன் வாழ்வின் வெற்றிப் படிக்கட்டாக 
மாற்றுவேன்....!

பாகா  

Saturday, January 14, 2017

ஜல்லிக்கட்டு பொங்கல்

இது வரை துரோகங்கள் நம்மை சூழ்ந்து
நின்று பிரித்து விட்டன 

இன்று அதே துரோகங்கள் நம்மை சேர்த்து விட்டிருக்கின்றன

இதழ்கள் பிரிந்து வார்த்தை உருவாகலாம் 
நாம் பிரிந்தால் துரோகிகள் உருவாகலாம்

சேர்ந்து நின்று உரிமையை நாம் கலாச்சார பாரம்பரியத்தை விடாது காப்போம் 
ஒன்று சேர்ந்து போராடுவோம் 
பொங்கட்டும் அன்றும் இன்றும் என்றும் 
ஜல்லிக்கட்டு பொங்கல்...

பாகா 

Thursday, January 12, 2017

ஏர் தழுவுதல்

உனை குழந்தையாய் கண்டெடுத்து 
பிள்ளையென நான் வளர்த்து 
தெய்வமாய் உனை வணங்கி திருவிழா 
எடுக்கையிலே 

எங்கிருந்தோ வந்தார் சிலர் 
அவர்கள் பின்னால் இருப்பவர் பலர் 
உன்னை நாங்கள் அடித்தோமாம் 
துன்புறுத்தி பார்த்தோமாம்  என்று 
திருவிழாவை தடை போட்டு 
உனை வெட்டி கூறு போட்டு விற்றனர் 
வெளிநாட்டில் 

அதிகாரத்தில் இருந்தவர்களோ இருப்பவர்களோ 
ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல் 
மெத்தனமாய் இருந்து விட்டு 
மக்கள் மனதில் புரட்சி என்ற விதை போட்டு 
போராட்டம் வெடித்த உடன் 

இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டு 
நாடகத்தை அரங்கேற்ற நல்ல நேரம் 
பார்க்கின்றனர் 

திருவிழாவை தடை செய்ததை மனது தாங்கிக் கொள்ளும் 
பிள்ளை போல வளர்த்த உன்னை துன்புறுத்தியதாக சொல்வதை 
மனது தாங்கிக் கொள்ள முடியவில்லை 
இன்னமும்   காத்திருக்கிறோம் திருவிழாவை நடத்த 
கண்ணீருடன்....!

பாகா  

Monday, January 9, 2017

மருந்து

உன் காதல் தோல்விக்கு 
ஆறுதல் கூறத்தான் வந்தேன் 
ஒரு தோழனாய் 

ஆனால் என்னை உன் 
காதல் தோல்விக்கு மருந்தாக்கினாய் 

நட்பு என்ற வட்டத்திற்குள் 
நான் நின்றேன்  ஆனால் 
நீ வட்டத்தின் விட்டமாக என் 
மனதை தாக்கினாய் 

உன் செய்கைகள் என்னைக் 
கவர்ந்தன என்னையும் அறியாமல் 
உன்னை விரும்புகிறேன் 

நீயும் என்னை விரும்புகிறாய் 
ஆனால் ஏனோ ஒரு தயக்கத்தால் 
சொல்லாமல் கொல்கிறாய் 

நாம் வேறு வேறு மதம் என்றாலும் 
நீ கூறு உன் சம்மதத்தை 
யார் எதிர்த்து வந்தாலும் சேர்ந்து வாழலாம்....!!

பாகா 

Tuesday, January 3, 2017

புதிய உலகம்

எங்கோ விழுந்தேன் 
எங்கே விழுந்தேன் 
உந்தன் சிரிப்பைக் கண்டு 
என்னை மறந்தேன் 

என்னை உன்னுள் 
ஓளித்துக் கொண்டு 
என்னை நானே தேடிக் 
கொண்டு இருக்கிறேன் 

எதற்கு உன்னை என்னுள் ஒளித்து 
எந்தன் எடை கூட்டினாய் 

காதல் என்ற ஆட்டத்தில் 
எந்தன் கண்ணை கட்டி விட்டு 
நான் தடுமாறி நடப்பதை 
தொலைவில் நின்று ரசிக்கிறாய் 

இருவரும் நிலவுக்கு சென்றிடலாம் 
தனிமையில் நம்மை ரசித்திடலாம் 
அங்கு ஒரு புதிய உலகத்தை 
உருவாக்கிடலாம்....!

பாகா