Saturday, December 31, 2016

வீடு

உயிருள்ள ஜென்மங்களை 
பாதுகாக்கும்  உயிரற்ற 
உயிர் ஜென்மம் நீ 

எங்கள் குடும்பத்தில் நீயும் 
ஒரு உறுப்பினர் தான் 
சந்தோசம் துன்பங்களில் 
பங்கு எடுக்கிறாய் 

உன்னை ராசி இல்லை  என்று 
நாங்கள் சொல்கின்றோம் 
உண்மை தான் எந்த ஒரு 
செயல் செய்தாலும் தோல்வி 
எதற்கெடுத்தாலும் தடை 

கேட்கிறது நீ சொல்லும் வார்த்தை 
மனிதர்கள் நீங்கள் செய்யும் 
தவறுகளுக்கு எங்கள் மேல் 
பழி போடுகிறீர்கள் 

உண்மை தான் மனிதர்கள் தானே 
உன்னை வாஸ்து பார்க்காமல் 
கட்டினார்கள்....!

பாகா 

Wednesday, December 28, 2016

நண்பனின் மரணம்

எங்கோ பிறந்து 
எந்த உறவும் இல்லாமல் 
நண்பன் என்ற உறவுடன் என்னிடம் வந்தாய் 

நான் உன்னுடன் சேர்ந்து படிக்கவில்லை 
உன்னிடம் அதிக நேரம் நான் செலவிடவில்லை 
ஆனால் சிறிது நாட்கள்  பழகினாலும் 
நான் உன்னை நல்ல நண்பனாக பார்த்தேன் 

நீ என்னவெல்லாம் ஆசைகளோடு 
இருந்தாயோ எனக்குத் தெரியவில்லை 
ஆனால் என்னுடைய ஆசை நீ 
மறுப்பிறவியிலும் எங்கள் நண்பனாக 
வர வேண்டும் 

மரணமே உன்னிடம் ஒரு கேள்வி 
கேட்க விரும்புகிறேன் 
இளமையில் வறுமை மிகவும் கொடியது 
என்று ஔவையார் பாடினார் 

வறுமையே கொடியது என்றபோது 
இளமைப் பருவம் கூட முற்றுப் பெறாத 
என் நண்பனைக் கொண்டு சென்றாயே 
மரணமே இது நியாயமா உன்னை சபிக்கின்றேன்!!!!!!!

பாகா  

Monday, December 26, 2016

ஓரவஞ்சனை

நான் உன்னைக் காதலிக்கிறேன் 
உனக்கும் என் மீது காதல் வரும் 
ஆனால் அது எப்போது 

நீ எனக்கு மட்டும் வேண்டும் என்று 
நினைக்கவில்லை 
ஆனால் எனக்கும் நீ வேண்டும் என 
நினைக்கின்றேன் 

எல்லாருக்கும் உன் மீது காதல் 
உனக்கோ சிலர் மீது மட்டும்  காதல் 
ஏன் இந்த ஓரவஞ்சனை 

உன் பார்வையை என்மேல் 
படர விடு 
எனக்குள் நீயும் வந்து விடு 
உன்னை எந்தன் சொந்தமாக்கி விடு 

என் காதலை  ஏற்றுக்கொண்டு 
என் வாழ்க்கையில் வந்து விடு 
               "வெற்றியே "

பாகா 

Thursday, December 22, 2016

நம்பிக்கை

நம்பிக்கை என்ற தும்பிக்கை கொண்டு 
பல தடைகளை உடைத்திடலாம் 

விடாமுயற்சியை மனதில் கொண்டு 
எட்டாக்கனியையையும் பறித்திடலாம் 

தைரியம் என்பதை உன்னுள் கொண்டு 
பயத்தை நீயும் விரட்டிடலாம் 

முயற்சிகள் பல தோற்றாலும் 
இறுதியில் புகழ்ச்சியாய் நீ மாற்றிடலாம் 

குறைகளை பலர் கூறினாலும் 
அதை நிறைகளாய் மாற்றி முன்னேறிடலாம் 

தோல்விகளை நீ துரத்தி அடி 
அதை மண்ணில் போட்டு புதைத்து அடி 

வெறியோடு நீ துரத்தி சென்றால் 
வெற்றிகள் பல குவித்திடலாம் ....

பாகா 

Monday, December 19, 2016

கடவுளுக்கு என் மேல்

கடவுளுக்கு என் மேல் எவ்வளவு பாசம் 
அதனால் தான் அள்ளி அள்ளி 
சோகங்களை கொடுக்கின்றான் 

அவனுக்கு என் மேல் எவ்வளவு கருணை 
அதனால் தான் நிரம்பி வழியுமாறு 
தோல்விகளை கொடுக்கின்றான் 

அவனுக்கு என் மேல் எவ்வளவு காதல் 
அதனால் தான் இரவில் என்னை 
தூங்க விடாது செய்கிறான் 

அவனுக்கு என் மேல் எவ்வளவு அன்பு 
அதனால் தான் எனக்கு நிறைய 
கண்ணீரை கொடுக்கின்றான் 

அவனுக்கு என் மேல் எவ்வளவு மோகம் 
அதனால் தான் என்னை இவ்வுலகிற்கு 
கொண்டு வந்து உயர விடாமல் 
பல துயரங்களை கொடுக்கிறான்.....!!!

பாகா  

Friday, December 16, 2016

வாழ விடு

என்  வாழ்வில் 
உன் காலடிச் சுவடுகள் 

என் மனதில் 
உன் காதல் நினைவுகள் 

என் உதட்டில் 
உன் உதட்டின் ரேகைகள் 

என் உடலில் 
உன் விரல்களின் தீண்டல்கள் 

என் காதலை ஏற்று விட்டு 
எதற்கு ஒரு துணை தேடினாய் 

 வாழ்வெல்லாம் நீ மட்டுமே என்னுடன் 
என்று ஏன் நீ பொய் கூறினாய் 

இப்போதாவது என் இதயத்தை 
என்னிடம் தந்து விடு 
இவ்வுலகில் என்னை உயிருடன் 
வாழ விடு.......!

பாகா  

Monday, December 12, 2016

காதலை ஏற்காமல்

உன் கண்களுக்கு மை  பூசினாய் 
உன் வார்த்தைகளில் பொய் பேசினாய் 

உன் உதடுகளில் சாயம் தீட்டினாய் 
உன் நினைவுகளால் என்னை மாயமாக்கினாய் 

உன் புருவங்களை அழகாக்கினாய் 
உன் உருவங்களை எனது கனவாக்கினாய் 

முகத்துக்கு பவுடர் பூசினாய் 
அதில் என்னை தவிடுபொடியாக்கினாய் 

உதடுகளில் சிரிப்பை வைத்தாய் 
அதில் என்னை அள்ளி சுருட்டி வைத்தாய் 

செய்வதை எல்லாம் செய்துவிட்டு 
ஏன் என் காதலை ஏற்காமல் 
என்னை பாழாக்கினாய்...!

பாகா 

Friday, December 9, 2016

மருந்து உண்டா..!

இவ்வுலகில் எல்லாவித நோய்களுக்கும் 
மாத்திரை உண்டு மருந்தும் உண்டு 

காய்ச்சலுக்கு மருந்து உண்டு 
தூக்கத்திற்கு மருந்து உண்டு 
மரணத்திற்கு மருந்து உண்டு 

காதலுக்கு மருந்து உண்டா..!
நியாபக சக்திக்கு மாத்திரை உண்டு 

ஆனால் சில நியாபகங்களை மறப்பதற்கு 
மாத்திரை உண்டா...!

அவ்வாறு இருந்திருந்தால் காதலில் 
தோற்றவர்கள் மரணத்தை 
விரும்ப மாட்டார்கள்....!

பாகா 

Wednesday, December 7, 2016

பிறந்தது

எழுத்துக்கள் இருப்பதால் தான் 
வார்த்தை பிறந்தது 

கடவுள் இருப்பதால் தான் 
நம்மில் பக்தி பிறந்தது 

கேள்வி இருப்பதால் தான் 
பதில் பிறந்தது 

பெண் இருப்பதால் தான் 
ஆண் பிறந்தது 

நீ இருப்பதால் தான் 
அன்பே நான் பிறந்தது 

உன்னைப் பார்த்து தான் 
என் காதல் பிறந்தது 

நம்மைப் பார்த்து தான் 
நம் வெற்றி பிறந்தது...

பாகா 

Sunday, December 4, 2016

தனலட்சுமி

தினம் தினம் தந்தாய் தரிசனம்
நீ இல்லையேல் எங்களுக்கு ஏது கரிசனம்

பணம் என்று சொன்னால் உறவுகள் கூடி வரும்
மடியில் கனம் ஒன்று வந்தால் தூக்கமும் ஓடி விடும்

தனம் என்ற சொல்லை உன்னில் வைத்தாய்
தினம் துன்பம் என்ற சொல்லை என்னுள் வைத்தாய்

உன் கைகளில் இருந்து கொட்டும் பணம்
பலர் சொற்கள் எனை வந்து கொட்டும் ரணம்

தனலட்சுமி என்ற பெயரைக் கொண்டாய்
பசி பட்டினியில் இருந்து எனை என்று காப்பாய்

தனலட்சுமி தனலட்சுமி என்று உனை துதித்தேன்
பணம் மட்டும் கையில் இல்லை என்று எண்ணித் தவித்தேன்...!

பாகா 

Friday, December 2, 2016

காதலுக்கு சாதி இல்லை

எனக்கு உன்னைப் பிடிக்கும் 
உனக்கும் என்னைப் பிடிக்கும் 

ஆனால் இவ்வுலகம் 
நம்மை வெறுக்கும் 

நீயும் நானும் வாழ்க்கையில்  ரசித்திட 
மனம் துடிக்கும் 

ஆனால் இச்சமுதாயம் நம்மை 
பிரித்திடத் துடிக்கும் 

காதல் என்ற வார்த்தை தவறா 
இல்லை காதலிப்பவர்கள் மேல் தவறா 

சாதி மதம் வரதட்சணை என்ற 
கொள்கையை ஒழிக்கப் பிறந்த 
காதலை ஏன் இன்னும் 
வெறுக்கின்றீர்கள்.....?!

பாகா