Saturday, December 31, 2016

வீடு

உயிருள்ள ஜென்மங்களை 
பாதுகாக்கும்  உயிரற்ற 
உயிர் ஜென்மம் நீ 

எங்கள் குடும்பத்தில் நீயும் 
ஒரு உறுப்பினர் தான் 
சந்தோசம் துன்பங்களில் 
பங்கு எடுக்கிறாய் 

உன்னை ராசி இல்லை  என்று 
நாங்கள் சொல்கின்றோம் 
உண்மை தான் எந்த ஒரு 
செயல் செய்தாலும் தோல்வி 
எதற்கெடுத்தாலும் தடை 

கேட்கிறது நீ சொல்லும் வார்த்தை 
மனிதர்கள் நீங்கள் செய்யும் 
தவறுகளுக்கு எங்கள் மேல் 
பழி போடுகிறீர்கள் 

உண்மை தான் மனிதர்கள் தானே 
உன்னை வாஸ்து பார்க்காமல் 
கட்டினார்கள்....!

பாகா 

Wednesday, December 28, 2016

நண்பனின் மரணம்

எங்கோ பிறந்து 
எந்த உறவும் இல்லாமல் 
நண்பன் என்ற உறவுடன் என்னிடம் வந்தாய் 

நான் உன்னுடன் சேர்ந்து படிக்கவில்லை 
உன்னிடம் அதிக நேரம் நான் செலவிடவில்லை 
ஆனால் சிறிது நாட்கள்  பழகினாலும் 
நான் உன்னை நல்ல நண்பனாக பார்த்தேன் 

நீ என்னவெல்லாம் ஆசைகளோடு 
இருந்தாயோ எனக்குத் தெரியவில்லை 
ஆனால் என்னுடைய ஆசை நீ 
மறுப்பிறவியிலும் எங்கள் நண்பனாக 
வர வேண்டும் 

மரணமே உன்னிடம் ஒரு கேள்வி 
கேட்க விரும்புகிறேன் 
இளமையில் வறுமை மிகவும் கொடியது 
என்று ஔவையார் பாடினார் 

வறுமையே கொடியது என்றபோது 
இளமைப் பருவம் கூட முற்றுப் பெறாத 
என் நண்பனைக் கொண்டு சென்றாயே 
மரணமே இது நியாயமா உன்னை சபிக்கின்றேன்!!!!!!!

பாகா  

Monday, December 26, 2016

ஓரவஞ்சனை

நான் உன்னைக் காதலிக்கிறேன் 
உனக்கும் என் மீது காதல் வரும் 
ஆனால் அது எப்போது 

நீ எனக்கு மட்டும் வேண்டும் என்று 
நினைக்கவில்லை 
ஆனால் எனக்கும் நீ வேண்டும் என 
நினைக்கின்றேன் 

எல்லாருக்கும் உன் மீது காதல் 
உனக்கோ சிலர் மீது மட்டும்  காதல் 
ஏன் இந்த ஓரவஞ்சனை 

உன் பார்வையை என்மேல் 
படர விடு 
எனக்குள் நீயும் வந்து விடு 
உன்னை எந்தன் சொந்தமாக்கி விடு 

என் காதலை  ஏற்றுக்கொண்டு 
என் வாழ்க்கையில் வந்து விடு 
               "வெற்றியே "

பாகா 

Thursday, December 22, 2016

நம்பிக்கை

நம்பிக்கை என்ற தும்பிக்கை கொண்டு 
பல தடைகளை உடைத்திடலாம் 

விடாமுயற்சியை மனதில் கொண்டு 
எட்டாக்கனியையையும் பறித்திடலாம் 

தைரியம் என்பதை உன்னுள் கொண்டு 
பயத்தை நீயும் விரட்டிடலாம் 

முயற்சிகள் பல தோற்றாலும் 
இறுதியில் புகழ்ச்சியாய் நீ மாற்றிடலாம் 

குறைகளை பலர் கூறினாலும் 
அதை நிறைகளாய் மாற்றி முன்னேறிடலாம் 

தோல்விகளை நீ துரத்தி அடி 
அதை மண்ணில் போட்டு புதைத்து அடி 

வெறியோடு நீ துரத்தி சென்றால் 
வெற்றிகள் பல குவித்திடலாம் ....

பாகா 

Monday, December 19, 2016

கடவுளுக்கு என் மேல்

கடவுளுக்கு என் மேல் எவ்வளவு பாசம் 
அதனால் தான் அள்ளி அள்ளி 
சோகங்களை கொடுக்கின்றான் 

அவனுக்கு என் மேல் எவ்வளவு கருணை 
அதனால் தான் நிரம்பி வழியுமாறு 
தோல்விகளை கொடுக்கின்றான் 

அவனுக்கு என் மேல் எவ்வளவு காதல் 
அதனால் தான் இரவில் என்னை 
தூங்க விடாது செய்கிறான் 

அவனுக்கு என் மேல் எவ்வளவு அன்பு 
அதனால் தான் எனக்கு நிறைய 
கண்ணீரை கொடுக்கின்றான் 

அவனுக்கு என் மேல் எவ்வளவு மோகம் 
அதனால் தான் என்னை இவ்வுலகிற்கு 
கொண்டு வந்து உயர விடாமல் 
பல துயரங்களை கொடுக்கிறான்.....!!!

பாகா  

Friday, December 16, 2016

வாழ விடு

என்  வாழ்வில் 
உன் காலடிச் சுவடுகள் 

என் மனதில் 
உன் காதல் நினைவுகள் 

என் உதட்டில் 
உன் உதட்டின் ரேகைகள் 

என் உடலில் 
உன் விரல்களின் தீண்டல்கள் 

என் காதலை ஏற்று விட்டு 
எதற்கு ஒரு துணை தேடினாய் 

 வாழ்வெல்லாம் நீ மட்டுமே என்னுடன் 
என்று ஏன் நீ பொய் கூறினாய் 

இப்போதாவது என் இதயத்தை 
என்னிடம் தந்து விடு 
இவ்வுலகில் என்னை உயிருடன் 
வாழ விடு.......!

பாகா  

Monday, December 12, 2016

காதலை ஏற்காமல்

உன் கண்களுக்கு மை  பூசினாய் 
உன் வார்த்தைகளில் பொய் பேசினாய் 

உன் உதடுகளில் சாயம் தீட்டினாய் 
உன் நினைவுகளால் என்னை மாயமாக்கினாய் 

உன் புருவங்களை அழகாக்கினாய் 
உன் உருவங்களை எனது கனவாக்கினாய் 

முகத்துக்கு பவுடர் பூசினாய் 
அதில் என்னை தவிடுபொடியாக்கினாய் 

உதடுகளில் சிரிப்பை வைத்தாய் 
அதில் என்னை அள்ளி சுருட்டி வைத்தாய் 

செய்வதை எல்லாம் செய்துவிட்டு 
ஏன் என் காதலை ஏற்காமல் 
என்னை பாழாக்கினாய்...!

பாகா 

Friday, December 9, 2016

மருந்து உண்டா..!

இவ்வுலகில் எல்லாவித நோய்களுக்கும் 
மாத்திரை உண்டு மருந்தும் உண்டு 

காய்ச்சலுக்கு மருந்து உண்டு 
தூக்கத்திற்கு மருந்து உண்டு 
மரணத்திற்கு மருந்து உண்டு 

காதலுக்கு மருந்து உண்டா..!
நியாபக சக்திக்கு மாத்திரை உண்டு 

ஆனால் சில நியாபகங்களை மறப்பதற்கு 
மாத்திரை உண்டா...!

அவ்வாறு இருந்திருந்தால் காதலில் 
தோற்றவர்கள் மரணத்தை 
விரும்ப மாட்டார்கள்....!

பாகா 

Wednesday, December 7, 2016

பிறந்தது

எழுத்துக்கள் இருப்பதால் தான் 
வார்த்தை பிறந்தது 

கடவுள் இருப்பதால் தான் 
நம்மில் பக்தி பிறந்தது 

கேள்வி இருப்பதால் தான் 
பதில் பிறந்தது 

பெண் இருப்பதால் தான் 
ஆண் பிறந்தது 

நீ இருப்பதால் தான் 
அன்பே நான் பிறந்தது 

உன்னைப் பார்த்து தான் 
என் காதல் பிறந்தது 

நம்மைப் பார்த்து தான் 
நம் வெற்றி பிறந்தது...

பாகா 

Sunday, December 4, 2016

தனலட்சுமி

தினம் தினம் தந்தாய் தரிசனம்
நீ இல்லையேல் எங்களுக்கு ஏது கரிசனம்

பணம் என்று சொன்னால் உறவுகள் கூடி வரும்
மடியில் கனம் ஒன்று வந்தால் தூக்கமும் ஓடி விடும்

தனம் என்ற சொல்லை உன்னில் வைத்தாய்
தினம் துன்பம் என்ற சொல்லை என்னுள் வைத்தாய்

உன் கைகளில் இருந்து கொட்டும் பணம்
பலர் சொற்கள் எனை வந்து கொட்டும் ரணம்

தனலட்சுமி என்ற பெயரைக் கொண்டாய்
பசி பட்டினியில் இருந்து எனை என்று காப்பாய்

தனலட்சுமி தனலட்சுமி என்று உனை துதித்தேன்
பணம் மட்டும் கையில் இல்லை என்று எண்ணித் தவித்தேன்...!

பாகா 

Friday, December 2, 2016

காதலுக்கு சாதி இல்லை

எனக்கு உன்னைப் பிடிக்கும் 
உனக்கும் என்னைப் பிடிக்கும் 

ஆனால் இவ்வுலகம் 
நம்மை வெறுக்கும் 

நீயும் நானும் வாழ்க்கையில்  ரசித்திட 
மனம் துடிக்கும் 

ஆனால் இச்சமுதாயம் நம்மை 
பிரித்திடத் துடிக்கும் 

காதல் என்ற வார்த்தை தவறா 
இல்லை காதலிப்பவர்கள் மேல் தவறா 

சாதி மதம் வரதட்சணை என்ற 
கொள்கையை ஒழிக்கப் பிறந்த 
காதலை ஏன் இன்னும் 
வெறுக்கின்றீர்கள்.....?!

பாகா

Wednesday, November 30, 2016

பயம்

பயமே ஏன் நீ என்னுள் வந்தாய் 
நான் வெறுத்தாலும் ஏன் பின் தொடர்ந்து 
வருகிறாய் !
அவ்வளவு காதலா என்மேல் உனக்கு 

எதற்கெடுத்தாலும் பயம் எல்லாமும் பயம் 
ஏன் எனக்கு பயம் 
எங்கே சென்றாலும் பயம் 
எங்கே நின்றாலும் பயம் 
ஏன் இந்த பயம் 

இந்த ஜென்மத்தில் வந்த பயமா 
இல்லை போன பிறவியில் இருந்து 
தொடரும் பயமா 
இல்லை வரப் போகும் பிறவியின் 
தொடக்கம் இந்த பயமா 

மனமே பயம் இல்லாத என்னை உருவாக்கு 
இல்லை இந்நிமிடமே என்னை இந்த 
மண்ணுக்கு இரையாக்கு......!

பாகா 

Monday, November 28, 2016

காதல் கொண்டாயோ

வேருக்கு மண்ணின் மேல் 
இருக்கும் பிணைப்பைப் பார்த்து
நீயும் என் கைகளைக் கொண்டு
உன்னை பிணைத்துக் கொண்டாயோ

மழைத்துளிகளுக்கு மண்ணின் மேல் 
உள்ள ஆசையால் வந்து நிலத்தை
அடைகின்றன அதைப் பார்த்து 
நீயும் என் மேல் உள்ள ஆசையால்
முத்த மழை பொழிந்தாயோ

காற்றுக்கு மரத்தின் மீது
கொண்ட விருப்பத்தால் இலைகளை 
கோதி விடுவது போல் நீயும்
என் மீது உள்ள விருப்பத்தால் 
என் கூந்தலை கோதி விடுகின்றாயோ 

வண்டிற்கு தேன் மீது உள்ள 
காதலைப் பார்த்து அன்பே
நீ என்னை காதல் செய்தாயோ.....

பாகா


Saturday, November 26, 2016

என் உயிர் அப்பா

எனது உடலுக்கு உயிர்
கொடுத்தாய் நீ

எனது சிறுவயதில் 
எனது ஆசைகளை நிறைவேற்றினாய் நீ

நான்  கேட்டதை அளவுக்கதிகமாக
வாங்கிக் கொடுத்தாய் நீ

உனக்கு துன்பம் வந்தாலும்
என்னை சந்தோசப்படுத்தினாய் நீ

கூலி வேலை செய்தாலும் 
என்னை ராஜாவாக வளர்த்தாய் நீ

எனக்கு ஒரு தோழனாக
நின்று வழிகாட்டினாய் நீ

துன்பங்களை இன்பமாக்கினாய்
தோல்விகளை  வெற்றியாக்கினாய்

இனிவரும் பிறவிகளிலும்
நீயே எனக்கு தந்தையாக வர வேண்டும்..

பாகா


Thursday, November 24, 2016

கொல்லும் அழகே

கருமையான புல்வெளி போன்று
உன் கூந்தல் 

அருவியின் அழகையே தோற்கடிக்கும் 
உன் நெற்றியில் வழியும் வியர்வை

அலை மேல் எழுந்து நிற்கும் 
உன் புருவங்கள்

துப்பாக்கித் தோட்டா போல் 
என் இதயத்தை துளைக்கும்
உன் கருவிழி பார்வை

கத்தியைப் போன்று கூர்மையாக
இருக்கும் உன் மூக்கு

மலரின் இதழ்களைப் போன்று
மிருதுவாக இருக்கும் உன் காது மடல்

தேனில் ஊறிய பலாச்சுளை போன்று
உன் இதழ்கள்
என்னைக் கொல்கின்றதே...

பாகா 

Tuesday, November 22, 2016

எப்போது வருவாய்

இவ்வுலகில் நான் உனக்காக வந்தேன்
உனக்காகவே வளர்கிறேன்
உனக்காகவே வாழ்கிறேன்

நீ என்று என் வாழ்வில் வருவாய்
எனைத் தேடி எப்போது வருவாய்
உன் உள்ளத்தை எப்போது தருவாய்

என் விரல்களோடு உன் விரல்கள் கோர்ப்பாயா
என் வெற்றி தோல்விகளில்
என்றும் துணையாக இருப்பாயா

என் வாழ்நாள் முழுவதும் என்னுடன்
இருப்பாயா
நாம் சேர்ந்து இவ்வுலகினில் வாழ்வோமா
இல்லை நான் மட்டும் வாழ்ந்து சாவேனா ....

பாகா 

Monday, November 21, 2016

நட்பு போதும்

நீ என்று என் வாழ்வில் வந்தாய் சகா 
எப்போது என் வாழ்வில் வந்தாய் சகா 

உனக்கும் எனக்கும் எந்த 
உறவுமில்லை 
ஆனால் இந்த உறவுக்கு பிரிவு 
என்றுமில்லை 

நட்பு இல்லாத இடமே இல்லை 
காதல் தோற்பது உண்டு 
நட்புக்கு தோல்வியே இல்லை 
காதலை வெறுப்பவர்கள் உண்டு 
நட்பை வெறுப்பவர்கள் எவருமில்லை 

நல்லவனாய் இரு 
நல்ல நண்பனாய் இரு 
உன் வாழ்க்கை சிறக்கும்....

பாகா  

Saturday, November 19, 2016

கேள்விக்குறி

ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் 
ஏன் என்னை ஏமாற்றிச் சென்றாய் 

எதற்கு என்னிடம் பொய்கள் கூறினாய் 
எதற்கு அதை மெய் போல் கூறினாய் 

எப்படி என்னை ஏமாற்றினாய் 
எப்படி காதலித்து ஏமாற்றினாய் 

எங்கே இன்று நீ ஓடினாய் 
எங்கே எனை விட்டு ஓடினாய் 

என்ன கூறினாய் என்னிடத்தில் 
என்ன செய்கிறாய் இவ்வுலகத்தில் 

ஏன்? எதற்கு?எப்படி?எங்கே?
என்ன? என்று உன்னிடம் 
கேள்வி கேட்காததால் நான் 
இன்று நிற்கிறேன்  
கேள்விக்குறியாய் "?"

பாகா 

Friday, November 18, 2016

இதயம் பறித்தாய்

நீ என் வாழ்வில் வந்தாய் 
மனதில் காதலைத் தந்தாய் 

சந்தோசமாய் என்னைக் கண்டேன் 
அதில் நான் உன்னைக் கண்டேன் 

இத்தனை வருட கனவு நினைவாகும் 
என்று நினைத்தேன் 
அது நடக்கவில்லை என்றபோது 
மிகவும் தவித்தேன் 

நான் உனக்கு முதல் இடம் 
என்று நினைத்தேன் 
நீயோ இரண்டாம் இடத்திற்கு 
என்னை உதறினாய் 

வேண்டாம் என்று உனை எடுக்க 
முயன்றேன் முடியவில்லை 
இன்றோ நான் எடுத்து விட்டேன் 
என் இதயத்தையே 
இனி என் இதயம் எவரிடமும் 
காதல் கொள்ளாது.....

பாகா  

Thursday, November 17, 2016

காதலியாய்

ஏனடா என் காதலன் ஆனாய் 
எனை உயிரோடு கொல்லும் 
கொலைகாரனும்  ஆனாய் 

கனவுகள் பல தந்தவனே 
உன் நினைவுகளில் எனை 
புதைத்தவனே 

பல வேதனைகள் நான் 
தந்த பின்பும் ஏன் எனை நீ 
தொடர்ந்து வந்தாய் 

நண்பனாய் என்று இருந்தவனை 
ஏன் காதலனாய் எனை 
ஏற்க வைத்தாய் 

என் உயிர் பிரியும் என்று 
தெரிந்திருந்தால் அன்றே உனை 
தவிர்த்திருப்பேன் 

மறுஜென்மம் என்று ஒன்றிருந்தால் 
உன் காதலியாய் மீண்டும் வர வேண்டும்.....

பாகா  

Tuesday, November 15, 2016

வந்து விடு

வந்து விடு என் வாழ்வில் 
நீ மறுபடி வந்து விடு 

ஏனடி நீ பிரிந்தாய் 
என் உயிரினில் ஏன் கரைந்தாய் 

விழி மேல் இருக்கும் 
வில்லினால் ஏன் கணைகளை 
வீசினாய் என் மேல் 

தவறுகள் செய்தேன் மன்னித்து விடு 
நம் காதலை மறுபடி வாழ விடு...

பாகா 

Monday, November 14, 2016

நீ வேண்டும்

தேவதையே நான் உனக்கு 
தேவையடி என் வாழ்வில் 
நீ எனக்கு 

குழந்தையாய் அடி உன் சிரிப்பு 
அதில் தவழ்கிறேன் அடி 
தினம் நினைத்து 

குறும்புகள் நீ செய்கிறாய் 
அதில் என்னை கொல்லாமல் 
கொல்கிறாய் 

மறுக்கிறாய் நீ மறுக்கிறாய் 
என் காதலை ஏன் 
வெறுக்கிறாய் 

நாம் வாழும் வாழ்வெதற்கு 
எடுத்துக் காட்டாக திகழும் 
அது பிறர்க்கு 

ஏற்றுக்கொள் என் காதலை 

பாகா  

Friday, November 11, 2016

கண்டேன்

நேற்று தான் அடி உன்னைக் கண்டேன் 
இன்று நான் எனை உன்னில் கண்டேன் 
நாளை நாம் சேரும் கனவைக் கண்டேன் 

தொலைவில் அடி உன்னைப் பார்த்தேன் 
அருகினில் நான் வந்திடத் துடித்தேன் 
காதலை ஏன் சொல்லாமல் தவித்தேன் 

நானும் உன் நிழலாய்த் தொடர 
ஏனடி என் மனதை துரத்துகிறாய்.......

பாகா  

Thursday, November 10, 2016

ஏக்கம்

நீ இல்லாமல் வாடுகிறேன் 
என் நிழலிலும் உன்னைத் தேடுகிறேன் 

நீ வருவாய் என ஏங்குகிறேன் 
உனைத் தருவாய் என தேங்குகிறேன் 

உன் உருவம் நான் நாடுகிறேன் 
என் பருவம் அதை தவறுகிறேன் 

எந்தன் கனவில் நான் புலம்புகிறேன் 
உன்னை அடைவேன் என நம்புகிறேன்.....

பாகா  

Wednesday, November 9, 2016

நட்பு

சூரியன் என்னை சுட்டெரித்தது 
காற்று என்னை வருடியது 
மழை என்னை குளிர்வித்தது 

தப்பு செய்யும் போது சுட்டெரிக்கும் சூரியனாக 
துன்பம் வரும் போது வருடிக் கொடுக்கும் காற்றாக 
சந்தோசத்தில் என்னை குளிர்விக்கும் 
மழையாக வரும் நட்புக்கு 
நான் தலை வணங்குகிறேன்....

பாகா 

Tuesday, November 8, 2016

இரவு

அந்த சூரியனிடம் கூறினேன் 
நிலவாய் மாறியது 

வானத்திடம் கூறினேன் 
நட்சத்திரங்களை வரவழைத்தது 

அந்த கற்றிடம் கூறினேன் 
தென்றலாய் மாறியது 
என் உயிரே நீ உறங்குவதற்கு ......

பாகா 

Monday, November 7, 2016

வெற்றி சிற்பம்

உன்னுடைய கவலைகளை கண்ணீர்த் 
திவலைகளாக மாற்று அந்த 

கண்ணீர்த் திவலைகள் தோல்வி 
என்னும் பாறாங்கல்லைக் கரைத்து 

வெற்றி எனும் சிற்பத்தை உருவாக்கும்....

பாகா 


Saturday, November 5, 2016

குழந்தையின் கண்ணீர்

குழந்தைக்கு சூடு வைத்தான் தந்தை
பள்ளிக்கூடம் போகாததற்கு  அல்ல
வேலைக்கு போக மாட்டேன் என்றதால்.....?!!

பாகா

Friday, November 4, 2016

பெண்ணின் வேதனை

நான் கனியாக இருந்திருக்கலாம்
நெற்பயிராக இருந்திருக்கலாம்

தானிய வகைகளாக பிறந்திருக்கலாம்
மண்ணாக கூட இருந்திருக்கலாம்

அப்பொழுதாவது புழு பூச்சிகளை சுமந்திருப்பேன்....!

பாகா

Thursday, November 3, 2016

தாயின் வேதனை

உன்னை வெயில் படாமல்
மழை விழாமல்

தாலாட்டி சீராட்டி 
வளர்த்தேன் தொட்டிலில்

நீ வெறுத்ததால்
நான் இன்றோ
முதியோர் இல்லக் கட்டிலில்....

பாகா

Wednesday, November 2, 2016

தாயாக ஒரு தாயின் ஏக்கம்

அத்தை,பெரியம்மா,சித்தி என்று 
கூப்பிட கூடி வந்தன உறவுகள்

அம்மா என்ற தொப்புள் கொடி 
உறவுடன் என்று வருவாய் என் செல்லமே...

பாகா

Tuesday, November 1, 2016

இயற்கையின் காத்திருப்பு

சூரியன் ஒளி கொடுக்காமல்
மொட்டுகள் மலராமல் 

பறவைகள் சத்தமிடாமல்
பூச்சிகள் ரீங்காரமிடாமல்

காத்திருக்கின்றன அன்பே 
நீ கண்களை திறப்பதற்காக...

பாகா

Monday, October 31, 2016

கனவுடன் வாழ்க்கை

பல கனவுகளுடன்
கல்யாண வாழ்க்கையில்
நுழைந்தேன்

இன்றும் கனவுடன்
வாழ்கிறேன் 

எப்போது என் உயிர் 
பிரியும் என்று குடிகார கணவனுடன்...

பாகா

Sunday, October 30, 2016

காத்திரு

காத்திரு அன்பே காத்திரு
அரவணைக்கும் கைகளுக்காக காத்திரு

நீ கட்டித் தழுவும் இந்த தேகத்திற்கு 
காத்திரு

நீ சுவைக்கத் துடிக்கும் இந்த இதழ்களுக்கு 
காத்திரு

அந்த இனிய விழா நடந்தேறும் அன்பே 
காத்திரு

காலம் கனியும் அன்பே அதுவரை நீ
காத்திரு....

பாகா

Saturday, October 29, 2016

தித்தி்க்கும் தீபாவளி

சட சடவென பட்டாசுகள்
வெடிக்க
டம் டும் என  வெடிகள் காதுகளை
பிளக்க
வானத்தைக் கிழித்து வானவேடிக்கைகள் 
வெடித்துப் பூக்க
அனைவரின் வீட்டிலும் தீப ஒளி
ஏற்றி கொண்டாடுங்கள்
தித்திக்கும் தீபாவளியை

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் ... :)

பாகா

Friday, October 28, 2016

வெட்கம்

நீ தூரம் இருந்தால் 
அருகில் வர வேண்டி
துடிக்கிறேன்

அருகில் இருந்தால் எனை 
தீண்ட வேண்டி 
தவிக்கிறேன்

நீ தீண்ட வரும் போது
நான் மறுக்கிறேன்
அது ஏன் அன்பே....!

பாகா

Thursday, October 27, 2016

வெற்றி கதவு

காலையில் கண்களைத் 
திறக்கும் போது

இன்று வெற்றி எனும்
கதவைத் திறக்க வேண்டும்
என்ற எண்ணத்தை உண்டாக்கு.....

பாகா

Wednesday, October 26, 2016

தவறே இல்லை

சரி என்று வரும் வரை 
தப்புகள் தவறே இல்லை 

தெளிவு வரும் வரை
குழப்பங்கள் தவறே இல்லை

அழகு வரும் வரை 
பருக்கள் தவறே இல்லை 

உறவு வரும் வரை
தனிமைகள் தவறே இல்லை

சேர்க்கை வரும வரை
பிரிவுகள் தவறே இல்லை

பொறுப்பு வரும் வரை 
குறும்புகள் தவறே இல்லை 

காதல் வரும் வரை 
ஏமாற்றம் தவறே இல்லை

குடும்பம் வரும் வரை 
சுதந்திரம் தவறே இல்லை 

வாய்ப்புகள் வரும் வரை 
காத்திருப்பு தவறே இல்லை 

வெற்றி வரும் வரை 
தோல்விகள் தவறே இல்லை


பாகா....

Monday, October 24, 2016

பெண் கல்வி

நான் இவ்வுலகில் மலர்ந்தேன் 
என்னைப் பெற்றவர்கள் மனம் வாடியது 

உற்றார் உறவினர்கள் அவர்களை 
சாடியது 

எனக்கும் என்னுடன் பிறந்தவனுக்கும் அவர்கள் 
அன்பில் வேறுபாட்டை காட்டியது  

பள்ளிக்கு சென்ற என்னை அடுப்பூத 
வைத்தது 

வயது வந்த  பருவத்தில் எனக்கு கழுத்தில் 
 தாலி  ஏறியது 

விபரம் அறியா பருவத்தில் எனக்கு 
குழந்தைகள் பிறந்தது 

இது தான் திருமணம் என்று புரிவதற்குள் 
என் கணவன் குடித்து குடித்து 
என் தாலி அறுந்தது 

படிப்புமில்லா கணவனுமில்லாமல் என் 
வாழ்க்கை தெருவில் நின்றது 

கஷ்டப்பட்டு உழைத்தேன் என் பெண் குழந்தை 
சந்தோசமாக பள்ளிக்கு சென்றது.....

பாகா 


Saturday, October 22, 2016

பறக்குது மனசு

மெல்ல நான் பறந்தேன் 
லேசாக என்னை உணர்ந்தேன் 

மனதின் சுமை யாவும் 
மெழுகாக உருகக் கண்டேன் 

ஏன் இந்த மாற்றம் என்னுள் 
எனை  நானே கேட்கும் தருணம் 

திடீர் என்று எந்தன் நெஞ்சம் 
ஏன் இன்று இப்படி தஞ்சம் 

விடை புரியா கேள்விகள் இன்று 
என்னுள் புதைந்து கிடக்கிறதென்று 

எனக்குள்  நானே கேட்டுக் கொண்டேன் 
மனசுக்குள்  எனையே  பூட்டிக்  கொண்டேன்... 

பாகா 


Wednesday, October 19, 2016

என் பிரபஞ்சம்

எந்தன் சிறு  உலகத்தில் நீ நுழைந்தாய் 
 எனக்கு வேறு உலகம் காட்டினாய் 

தனிமை விரும்பியாய் இருந்த என்னை 
கை பிடித்து கூட்டிச்சென்று  உலகழகை காட்டினாய் 

வெறுமையான மனதில் மெல்ல மெல்ல 
முழுதாய் நீயே நிரம்பினாய் 

சிறுபிள்ளைத் தனமாக நடக்கும் போதும் 
உன் சிறு சிரிப்பினில் கொன்றாய் 

கோபப்பட்டுக்  குதிக்கும் போதும் 
உன் மௌனப் பார்வையில் வென்றாய் 

கங்காருவை போல என்னை உன் மடியில் 
வைத்து தாங்கினாய் 

உலகமே  இப்படித்தான் என்று காட்டிய 
என் பிரபஞ்சமே நீதான் அன்பே.....

பாகா   

Monday, October 17, 2016

கரை மீது கடல் கொண்ட காதல்

காதலர்களுக்கு நம் மீது காதல் 
எனக்கோ உன் மீது காதல் 

குழந்தைகள் நம்மைக் கண்டால் 
துள்ளி குதித்து விளையாடும் 

நான் உனைக் காண ஓடி வந்து 
தொட்டு விட்டு செல்கிறேன் 

நாம் ஆடும் விளையாட்டை 
அனைவரும் ரசிப்பர்  

விளையாட்டு வினையானால் 
அனைவரும் துடிப்பர் 

நாம் சேர்ந்து வாழ நினைத்தால் 
உலகம் அழியும் 

ஓடி வந்து தொட்டு செல்லும் 
இந்த காதல் விளையாட்டே போதும் 
எனக்கு.... 

பாகா 


Thursday, October 13, 2016

மனசு

பறக்க தவிக்குது மனசு 
எல்லாம் மறந்து பறக்க துடிக்குது மனசு 

லேசாய் உணர்கிறேன் என்னை 
மனதில் புதிதாய் ஒரு வித எண்ணம் 

அனைவரும் எனையே பார்க்க 
வெட்கித் தவிக்குது மனசு 

எனக்குள் மட்டுமா மாற்றம் இல்லை 
அன்பே உனக்குள்ளும் உண்டோ இந்த மாற்றம் 

கேள்வி கேட்டு கேட்டு குதிக்கும் இதயம் 
எனக்குள் எப்போது  வந்தது இந்த உதயம்.....

பாகா 

Wednesday, October 12, 2016

பிள்ளையார்



அழகுக் கடவுள் முருகனின் அண்ணனே
ஆணை முக கடவுளே
எலியை வாகனமாய் கொண்டவனே
எங்கள் வலிகளை போக்குபவனே

துதிக்கையை கொண்டவனே
உனை துதிப்போரை காப்பவனே
குழந்தைகளுக்கு பிடித்த கடவுளே
தொந்தி கணபதியே உன்னை வணங்குகின்றேன்.....

பாகா

Tuesday, October 11, 2016

மரம்

என்னை அனைவரும் அடித்தார்கள் நான் 
பொறுமையாகவே இருந்தேன் 

என் உடம்பில் கீறல்களை உண்டாக்கினார்கள் 
அமைதியாய்  இருந்தேன் 

என் மேல் கல் விட்டு எறிந்தார்கள் 
அப்போதும்  புன்னகையை சிந்தினேன் 

என் மேல் ஏன் இவ்வளவு கோபம் 
பலருக்கு 

என்னை வெட்டாதீர்கள் மாறாக என்ன வேணாலும் 
துன்புறுத்துங்கள் 

உங்கள் கோபம் தீர என்னை  மண்ணில் இட்டு புதையுங்கள் 
நான் துளிர்த்தெழுந்து உங்களுக்கு மட்டுமல்ல 
உங்கள் சந்ததியினருக்கும் உதவி செய்வேன் 

உலகை காப்பாற்ற என்னை மண்ணில் இட்டு புதையுங்கள் 
கண்ணீருடன் வேண்டுகிறேன்......


பாகா 

Monday, October 10, 2016

அப்பா

விபரம் அறியா பருவத்தில் எனக்கு 
எல்லாமும் நீ தான் 

மழலை தாண்டிய பருவத்தில் எனக்கு 
உலகமும் நீ தான் 

வயது வந்த பருவத்தில் எனக்கு 
நண்பனும் நீ தான் 

நமக்குள் சிறு இடைவெளி வரும் வயதிலும் 
எனக்கு  ஹீரோவே நீ தான் 

வேலை கிடைக்காத  நேரத்தில் எனக்குள் 
தன்னம்பிக்கையை தூண்டியது நீ தான் 

இதுவும் கடந்து போகும் பிரச்சனைகள் உடைந்து 
போகும் என்று உறுதுணையாய் நின்றதும் நீ தான் 

இதுவரை என் வாழ்நாளில் உங்களுக்கு எதுவும் 
செய்ததில்லை 

கடவுள் என்னிடம் வந்து வரம் கொடுத்தால் 
என் அப்பாவிற்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் 
கொடுக்க கேட்டு கொள்வேன் .....

I Love You அப்பா 

பாகா 


Saturday, October 8, 2016

வெற்றி

வானம் உன் கையில் இல்லை
பூமி உன் கையில் இல்லை
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் இருக்கின்றதே

தோல்வி அதை கொன்னுப் போடு
வெற்றி அதை நெஞ்சில் போடு
உலகம் உன் பெயர் சொல்லி நடை போடும்

அச்சங்கள் அது உன்னை கொல்லும்
வை நம்பிக்கை என்ற ஒரு சொல்லும்
நம்பிக்கை என்ற சொல் போதும்
அதுவே நம் வெற்றியின் முதல் படியாகும்...

பாகா

முயற்சி ஆரம்பம்

எல்லாருக்கும் வணக்கம் என் பெயர்  பா.காளிகுமார்   நான்  இங்கு எனது கவிதை என்ற பிதற்றல்களை பதிவிட       இருக்கின்றேன் நீங்கள் உங்கள் ஒய்வு 
நேரத்தில் இங்கு வந்து பார்த்து உங்கள் கருத்துக்களை  தெரிவிக்க விரும்புகின்றேன் இது என்னுடைய முதல் இணையதள பதிவு முயற்சி ஆதரவு  தெரிவியுங்கள் நன்றி.